எட்டர்னல் (Eternal) நிறுவனம் 2025–26 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு (Q3FY26) நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. டிசம்பர் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 73 சதவீதம் உயர்ந்து 102 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் நிகர லாபம் 59 கோடி ரூபாயாக இருந்தது.
நிகர லாபத்தில் ஏற்பட்ட இந்த உயர்வு பெரும்பாலும் க்விக் காமர்ஸ் வணிகம் மற்றும் B2B சோர்சிங் தளத்தின் பங்களிப்பினால் ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Q3FY26 காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து வருவாய் வருடாந்திர அடிப்படையில் 202 சதவீதம் உயர்ந்து 16,315 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் செயல்பாடுகளிலிருந்து வருவாய் 5,405 கோடி ரூபாயாக இருந்தது. வருவாய் உயர்வுக்கு க்விக் காமர்ஸ் வணிகமும் அதிகரித்த ஆர்டர் மதிப்பும் முக்கிய காரணங்களாக இருந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
எட்டர்னல் வெளியிட்ட அறிக்கையின்படி, ப்ளிங்கிட் (Blinkit) மற்றும் ஹைப்பர்பியூர் (Hyperpure) தளங்கள் இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளன. ப்ளிங்கிட்டின் நிகர ஆர்டர் மதிப்பு (NOV) வருடாந்திர அடிப்படையில் 121 சதவீதம் உயர்ந்து 13,300 கோடி ரூபாயாக இருந்தது.
உணவு டெலிவரி வணிகத்தில் நிகர ஆர்டர் மதிப்பு 16.6 சதவீதம் உயர்ந்து 9,846 கோடி ரூபாயாக இருந்தது. கோயிங்-அவுட் பிரிவில் நிகர ஆர்டர் மதிப்பு 19.9 சதவீதம் உயர்ந்து 2,587 கோடி ரூபாயாக பதிவானது.
எட்டர்னல் குழுமம் பங்குச் சந்தைக்கு அளித்த அறிவிப்பில், தீபிந்தர் கோயல் நிறுவத்தின் இயக்குநர், மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ராஜினாமா 1 பிப்ரவரி 2026 முதல் அமலுக்கு வரும்.
நிறுவனத்தின் இயக்குநர் குழு அல்பிந்தர் சிங் திந்த்சாவை புதிய CEO மற்றும் முக்கிய மேலாண்மை பணியாளர் (KMP) ஆக நியமித்துள்ளது.
க்விக் காமர்ஸ் வணிகம் இந்த காலாண்டில் வருவாய் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாக நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ப்ளிங்கிட் மற்றும் ஹைப்பர்பியூர் தளங்கள் மூலம் அதிக ஆர்டர் மதிப்பு, மேம்படுத்தப்பட்ட லாஜிஸ்டிக்ஸ் மற்றும் நேர்த்தியான விநியோகம் நிறுவனத்தின் மொத்த செயல்திறனை ஆதரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.









