நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மலைப் பகுதிகள் முதல் சமவெளிப் பகுதிகள் வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் ஓடைகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. பல மாநிலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புது தில்லி: நாடு முழுவதும் தற்போது பருவமழை முழு வீச்சில் உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வட, தென் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை முதல் மிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப்பகுதிகள் முதல் சமவெளி பகுதிகள் வரை மழை வெளுத்து வாங்கி வருவதால் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிப்படுகின்றனர்.
வட இந்தியாவில் மழையின் தாக்கம்
- தில்லி-என்சிஆர்: தேசிய தலைநகர் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலையிலிருந்து லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழையால் யமுனை நதியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து அபாய அளவை நெருங்கி வருகிறது.
- உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. லக்னோ, அயோத்தி, பஹ்ரைச், குஷிநகர் மற்றும் பரபங்கி போன்ற மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி கிழக்கு உ.பி.யில் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநிலம் முழுவதும் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- உத்தரகண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம்: மலை மாநிலங்களில் நிலைமை மேலும் மோசமாக உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் சமவெளி மற்றும் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் சிம்லா, மண்டி, சிர்மூர், குலு மற்றும் காண்டா போன்ற பகுதிகளில் இமாச்சல பிரதேசத்தில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் சாலைகள் மூடப்படும் சம்பவங்கள் ஏற்கனவே அதிகமாக உள்ளன.
பீகார் மற்றும் ஜார்கண்டில் மோசமான நிலைமை
பீகாரின் தர்பங்கா, சீதாமரி, சமஸ்திபூர், பூர்னியா மற்றும் மேற்கு சம்பரண் போன்ற மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை தொடரும். இந்த பகுதிகளில் நீர் தேங்கி சாலைகள் துண்டிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஜார்கண்டில் ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் இந்தியாவில் பருவமழையின் தாக்கம்
- கேரளா மற்றும் தமிழ்நாடு: தென் இந்தியாவிலும் பருவமழை தீவிரமாக உள்ளது. ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கேரளா மற்றும் தமிழகத்தின் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாநிலங்களில் மழை தொடர வாய்ப்புள்ளது. கேரளாவில் ஏற்கனவே நதிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கர்நாடகா மற்றும் லட்சத்தீவு: கர்நாடக கடற்கரை மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் ஆகஸ்ட் 5 முதல் 9 வரை கடல் அலைகள் உயரக்கூடும். இதனால் மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை
அருணாச்சல பிரதேசத்தில் ஆகஸ்ட் 5, 7 முதல் 10 வரை கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடாநகர், பசிகாட் மற்றும் தவாங் போன்ற மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.